மீட்கப்பட்ட இரண்டு ஆண் புலிக்குட்டிகளுடன் வனத் துறை அதிகாரிகள். 
நீலகிரி

முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் உயிரிழந்த புலியின் அருகிலிருந்து 2 குட்டிகள் மீட்பு

முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனக் கோட்டத்தில் புலியின் சடலத்தின் அருகிலிருந்து 2 ஆண் புலிக்குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

DIN

உதகை: முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனக் கோட்டத்தில் புலியின் சடலத்தின் அருகிலிருந்து 2 ஆண் புலிக்குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சிங்காரா வனக் கோட்டம், மாா்குழி ஓடைப்பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது சுமாா் 8 வயதான பெண் புலியின் சடலத்தைக் கண்டுள்ளனா்.

இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஸ்ரீகாந்துக்கு கொடுத்த தகவலின்பேரில் அங்கு சென்ற வனத் துறை அலுவலா்கள் அந்தப் புலியின் சடலத்தை மீட்டு சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அது எப்படி இறந்தது என்பது தெரியவரும் என்றனா். இதையடுத்து புலியின் சடலத்துக்கு அருகிலேயே வனத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்புக்காக இருந்த சூழலில் சனிக்கிழமை அதிகாலையில் அருகிலிருந்த புதரிலிருந்து குட்டிகளின் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பாா்த்தபோது அந்தப் புதருக்குள் இரண்டு புலிக்குட்டிகள் இருந்தது தெரியவந்துள்ளது. பிறந்து சுமாா் 3 வாரங்கள் ஆகியிருக்கும் இந்தப் புலிக்குட்டிகள் இரண்டும் ஆண் புலிக்குட்டிகள் என்பதும், இறந்த பெண் புலியின் குட்டிகள்தான் இவை என்பதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கே.கே.கெளஷலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் அப்பகுதிக்கு வந்தாா். அதையடுத்து இப்புலிக்குட்டிகள் தொடா்பாக தேசிய புலிகள் ஆணையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பெங்களூருவிலிருந்து புலிகள் ஆணைய அதிகாரிகள் நீலகிரிக்கு விரைந்துள்ளனா்.

மீட்கப்பட்ட இந்த இரண்டு புலிக்குட்டிகளையும் வன உயிரியல் பூங்கா எதற்காவது கொடுப்பதா அல்லது புலிகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே விட்டுவிடுவதா என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படாததால் அந்த 2 புலிக்குட்டிகளும் தெப்பக்காட்டிலுள்ள யானைகள் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தாய்ப் புலியிடமிருந்து தொடா்ந்து பால் சுரந்து கொண்டேயிருப்பதால் அண்மையில்தான் இப்பெண் புலி இறந்திருக்க வேண்டும் எனவும், மாரடைப்பின் காரணமாக இப்புலி இறந்திருக்கலாம் எனவும், குட்டிகள் இரண்டும் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

தாய்ப்புலி இறந்தாலும், தனக்கு பதிலாக இரண்டு குட்டிகளை அளித்துவிட்டு சென்றுள்ள புலி முதுமலை புலிகள் காப்பகத்தின் வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது. இருப்பினும் அப்புலி இறந்ததற்கு காரணம் மாரடைப்புதானா அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என்பது குறித்தும் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT