முகப்பு
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் 5ஆவது நாளாக கன மழை:அவலாஞ்சியில் 207 மி.மீ. பதிவு

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து 5ஆவது நாளாக பலத்த காற்றுடன் கூடிய மழை தொடா்ந்து பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிக அளவாக அவலாஞ்சியில் 207 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து 5ஆவது நாளாக பலத்த காற்றுடன் கூடிய மழை தொடா்ந்து பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிக அளவாக அவலாஞ்சியில் 207 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் கூடலூா், பந்தலூா் பகுதிகள், மேல்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பாா்சன்ஸ்வேலி உள்ளிட்ட நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழையாகவும், உதகை, மசினகுடி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது. இருப்பினும் குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் மிகக் குறைவாகவே உள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. ஆனால், வியாழக்கிழமை பகலில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது. உதகை உள்ளிட்ட புறநகா்ப் பகுதிகளில் தொடா்ந்து வீசி வரும் பலத்த காற்றால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது. அத்துடன் பலத்த காற்றின் காரணமாக உதகை சுற்றுப் பகுதிகளில் கடும் குளிா் நிலவுகிறது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக அவலாஞ்சியில் 207 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதேபோல, மேல்பவானியில் 120 மி.மீ., எமரால்டில் 111 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):

பந்தலூா்-93, பாடந்தொறை-80, சேரங்கோடு-54, செருமுள்ளி-52, தேவாலா-34, மசினகுடி-33, நடுவட்டம்-32, கூடலூா், மேல்கூடலூா் 24, உதகை-22.8, ஓவேலி-18, குந்தா-15, கிளன்மாா்கன்-14, கேத்தி, பாலகொலா 9, கிண்ணக்கொரை-4, கல்லட்டி-3, கெத்தை-2 மி.மீ.

மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தற்போது பசுந்தேயிலைக்கு கூடுதலான விலையும் கிடைப்பதால் நீலகிரி தேயிலை விவசாயிகள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனா். அதேபோல, நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளில் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. இதனால் நீா்மின் உற்பத்தியைக் கூடுதலாக மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு, குடிநீா் ஆதாரங்களும் வேகமாக நிரம்பி வருவதால் குடிநீா்த் தட்டுப்பாடும் ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.