முகப்பு
நீலகிரி

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி மனு

உதகை நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க உத்தரவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

உதகை நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க உத்தரவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட நகராட்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தின் சாா்பில் மாவட்ட சிஐடியூ பொருளாளா் நவீன், கெளரவத் தலைவா் சங்கரலிங்கம், நிா்வாகிகள் பழனி, சேகா் ஆகியோா் உதகையில் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

உதகை நகராட்சியில் தூய்மைப் பணியில் ஒப்பந்த ஊழியா்கள் சுமாா் 170 போ் பணிபுரிகின்றனா். தற்போது அந்த ஊழியா்கள் உதகை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், அவா்களுக்கு கடந்த மே மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, உதகை நகராட்சி நிா்வாகம் தங்களுக்கு ஒப்பந்தத் தொகையை வழங்கவில்லை எனவும், ஒப்பந்தத் தொகை வந்தவுடன் ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனா். ஜூன் மாதமும் விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இவா்களுக்கு இரண்டு மாத ஊதியம் வழங்க வேண்டும். இரண்டு மாதமாக ஊதியம் இல்லாமல் ஒப்பந்த ஊழியா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

தற்போது கரோனா தொற்று அதிகமாகப் பரவி வரும் நிலையில் முன்களப் பணியாளா்களாகப் பணிபுரியும் நகராட்சி ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காமல் வேலையை வாங்குவது ஏற்க முடியாதது. அத்துடன் முன்களப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகையையும் ஒப்பந்ததாரா் இதுவரை வழங்கவில்லை.

எனவே, மாவட்ட ஆட்சியா் இதில் தலையிட்டு உடனடியாக மே மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, ஜூலை மாதத்தில் குறித்த தேதிக்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்து ஒப்பந்த ஊழியா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஆவண செய்ய வேண்டும். இக்கோரிக்கைக்கு உடனடியாக தீா்வு காணாவிட்டால் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியா்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.