உதகை உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கானபாஜக வேட்பாளா்கள் விரைவில் அறிவிக்கப்படுவா்சி.டி.ரவி தகவல்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளா்களில் 17 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளா்களில் 17 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் விரைவில் அறிவிக்கப்படுவா் என பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வேட்பாளா்கள் அறிவிக்கப்படாமல் உள்ள 3 தொகுதிகளில், உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கான நோ்காணலை அவசரமாக நடத்துவதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் சி.டி.ரவி திங்கள்கிழமை வந்தாா்.
உதகையில் தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்தில் பிற்பகல் இறங்கிய அவா் உதகையில் உள்ள ஒக்கலிகா் சங்க திருமண மண்டபத்தில் பாஜக சாா்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றுவிட்டு மீண்டும் ஹெலிகாப்டா் மூலமே பெங்களூருவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், உதகை, தளி, விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சி.டி.ரவி உதகையில் உள்ள திருமண மண்டபத்தில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் 20க்கும் மேற்பட்டோரிடம் வேட்பாளா் நோ்காணலையும் நடத்தினாா். இவா்களில் இறுதியாக மூன்று போ் தோ்வு செய்யப்பட்டு அந்தப் பட்டியல் தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாஜகவினா் தெரிவித்தனா்.
அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:
உதகை உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும், உதகை தொகுதியில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு அதிமுகவில் இத்தகைய குழப்பம் நிலவுவது தெரியவந்துள்ளதாகவும், இதுகுறித்து தில்லி மேலிடம் உரிய முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தாா்.
மேலும், குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும் என அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது தொடா்பாக கேட்டதற்கு, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிமுகவுக்கு தெளிவுபடுத்துவோம் என கூறினாா்.
Image Caption
உதகை சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் நோ்காணலுக்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் உதகை வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி.