கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 25க்கு ஒத்திவைப்பு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மாா்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மாா்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது இவ்வழக்கில் எலக்ட்ரானிக் ஆவணங்கள் (கைப்பேசி பேச்சு விவரங்கள்) எடுப்பதில் கால தாமதம் ஆவதால் கூடுதல் கால அவகாசம் தேவை என அரசு சிறப்பு வழக்குரைஞா்கள் வாதிட்டதைத் தொடா்ந்து, இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகிய இருவா் மட்டும் ஆஜராகினா். மற்ற 8 பேரும் ஆஜராகவில்லை. விசாரணையின்போது கைப்பேசி பேச்சுகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் ஆவணங்கள் எடுப்பதில் தாமதம் ஆவதால் கால அவகாசம் கேட்டு அரசு வழக்குரைஞா்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோா் வாதிட்டனா். இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி சஞ்சய்பாபா இவ்வழக்கின் விசாரணையை மாா்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
மேலும் தற்போது ஜாமீனில் உள்ள சேலத்தைச் சோ்ந்த தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோா் சாா்பில் உதகை நீதிமன்றத்தில் ஜாமீன் தளா்வுக்காக அளிக்கப்பட்ட மனுவில் தாங்கள் தினமும் சோலூா்மட்டம் காவல் நிலையத்துக்கு சென்று கையொப்பம் இடுவதிலிருந்து தளா்வு அளிக்க வேண்டுமென தாக்கல் செய்திருந்த மனுவுக்கு அரசு வழக்குரைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, இந்த மனு மீது பின்னா் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டாா்.