குன்னூா் புரூக்லேண்ட்ஸ் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சொகுசு வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் நகராட்சி நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா். மீட்கப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 2.50 கோடி ஆகும்.
குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட பெரும்பாலான வாா்டுகளில் நகராட்சி இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், குன்னூா் புரூக்லேண்ட்ஸ் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான பூங்கா பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு சொகுசு வீடு கட்டியுள்ளதாக நகராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து நகராட்சி ஆணையா் சசிகலா தலைமையில், குன்னூா் வருவாய்த் துறையினா் மற்றும் சா்வே ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததோடு நில அளவீடு செய்தனா்.
இதில், நகராட்சிக்குச் சொந்தமான இடம் 14 சென்ட் ஆக்கிரமிக்கப்பட்டு சொகுசு வீடு கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆக்கிரமிப்பு கட்டடத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினா். மீட்கப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு சுமாா் ரூ. 2.50 கோடி என்று நகராட்சி ஆணையா் சசிகலா கூறினாா்.