முகப்பு
திருப்பூர்

பட்டுப்போனாலும் பலன் தரும் தென்னை

வறட்சியால் தமிழகத்தில் பட்டுப்போன தென்னை மரங்கள்,  கேரள வீடுகளை அலங்கரிக்க அதிகளவில் இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

Updated On : 13 டிசம்பர், 2014 at 5:29 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:09 PM

வறட்சியால் தமிழகத்தில் பட்டுப்போன தென்னை மரங்கள்,  கேரள வீடுகளை அலங்கரிக்க அதிகளவில் இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

இதை தமிழகத்திலேயே மதிப்புக்கூட்டிய பொருள்களாக மாற்றி விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள்எழுப்பப்பட்டுள்ளன.

 கடந்த 2012-13, 2013-14-ஆம் ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்து கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயம் பாதிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமும் அளிக்கப்பட்டது.

Advertisement

 இந்த வறட்சியால் பல மாவட்டங்களிலுள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்களும் போதிய நீர் ஆதாரம் இல்லாமல் பட்டுப்போயின. அந்தவகையில், திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், வெள்ளக்கோவில், பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், இம்மாவட்டத்தை ஓட்டியுள்ள ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலும்  ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போயின.

 வறட்சியால் பட்டுபோன இந்த மரங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று தென்னை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், அதற்கான தொகைகள் இதுவரை ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், பட்டுப்போன தென்னை மரங்களை வெட்டி கேரளத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

  பட்டுப்போனாலும் பலன் தரும் தென்னைகளுக்கு கேரளத்தில் கடும் கிராக்கி நிலவுகிறது. கேரளத்தில் தென்னை மரங்களைக் கொண்டு மாடி வீடுகளின் கைப்பிடி, ஓட்டு வீடுகளுக்கு கூரைகள், தளவாடம் மற்றும் அலங்காரப் பொருள்கள் அதிகளவில் செய்யப்படுகின்றன.

 இதுதவிர, ஆயுர்வேத சிகிச்சை முறை ஆலோசனைகளின் படி தென்னை மரங்களைக் கொண்டு செய்யப்பட்ட கட்டில்கள் அம்மாநிலத்தில் அதிகளவில் விற்பனையாகின்றன.

 இத்தகைய பொருள்கள் செய்வதற்குத் தேவையான தென்னை மரங்கள் வெளி மாநிலங்களில் இருந்தே அதிகளவில் கொண்டு செல்லப் படுகின்றன.

அந்தவகையில், தற்போது தமிழகத்தில் பட்டுப்போன நிலையில் காணப்படும் தென்னை மரங்கள் கேரளத்துக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது என்கின்றனர் திருப்பூர் மாவட்ட விவசாயிகள்.

 அவர்கள் மேலும் கூறுகையில், கேரளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு மதிப்புக்கூட்டிய பொருள்களாக்கி விற்பனை செய்யப்படும் தென்னை மரங்களை தமிழகத்திலேயே மதிப்புக்கூட்டு பொருள்களாகத் தயாரித்தால் கூடுதல் வருவாயும், வேலை வாய்ப்பும் பெற முடியும்.  அரசு, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.