திருப்பூர் மண்டலத்தில் 68 நாள்களுக்குப் பிறகு 197 அரசு பேருந்துகள் இயக்கம்
திருப்பூர் போக்குவரத்து மண்டலத்தில் 68 நாள்களுக்குப் பின்னர் 197 அரசு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன
திருப்பூர் போக்குவரத்து மண்டலத்தில் 68 நாள்களுக்குப் பின்னர் 197 அரசு பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் இல்லாததால் பெரும்பாலான பேருந்துகள் தாமதமாக இயக்கப்பட்டன.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது முடக்கத்தில் தளர்வுகளை ஏற்படுத்தியதன் அடிப்படையில் 50 சதவீத பேருந்துகள் திங்கள்கிழமை இதல் மண்டலங்களுக்குள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
இதன்படி திருப்பூர் போக்குவரத்து மண்டலத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளுக்கு என மொத்தம் 197 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளில் கிருமி நாசினியால் சுத்தப்பட்டிருந்தது. மேலும், ஓட்டுநர், நடத்துநர் கையுறை, முகக் கவசம் அணிந்திருந்தனர்.
அதே போல், பேருந்து பயணிகளுக்கும் முகக் கவசம் அணிந்தே பயணித்தனர். எனினும் பெரும்பாலான பேருந்துகளில் பயணிகள் கூட்டம் இல்லாததால் தாமதமாகவே சென்றன.