திருப்பூரில் கோயில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றம் செய்வதைக் கண்டித்து மக்கள் மறியல்
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை வேறு துறைக்கு மாற்றம் செய்வதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை வேறு துறைக்கு மாற்றம் செய்வதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர், ஆண்டிபாளையம் பகுதியில் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 11.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை காவல்துறைக்கு மாற்ற இந்து சமய அறநிலையத்துக்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கோயில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றம் செய்வதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், குளத்துப்புதூர் உள்ளிட்ட கிராமங்களைக் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பூர்-மங்கலம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கோயில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றம் செய்வது கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தர்னாவில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஆயிரத்தும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருப்பூர்-மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.