முகப்பு
திருப்பூர்

குடும்பத் தகராறில் மாமியார் கொலை: மருமகள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

குடும்பத் தகராறில் மாமியார் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருமகள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
குடும்ப தகராறில் மாமியார் கொலை: மருமகள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
பகிர்:

குடும்பத் தகராறில் மாமியார் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருமகள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் திலகர் நகரை சேர்ந்தவர் ராமசாமி (65). இவரது முதல் மனைவி மயங்காத்தாள். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து ராமசாமி சகுந்தலா என்பவரை 2-வது திருமணம் செய்தார்.

இவர்களுக்கு கார்த்தி, சரவணக்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.  இந்த நிலையில் சகுந்தலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலையில் அடிபட்டு இறந்துவிட்டதால், ராமசாமி தனது முதல் மனைவி மயங்காத்தாளை அழைத்து வந்து  குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே மூத்த மகன் கார்த்திக்கு, அதே பகுதியை சேர்ந்த பிருந்தாவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். கார்த்தியின் தம்பி சரவணக்குமார், பிருந்தாவின் தங்கை லாவண்யாவை காதலித்தாகக் கூறப்படுகிறது. திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சரவணக்குமார், லவண்யாவை பேச வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

இது பிருந்தாவின் பெற்றோர் மற்றும் தம்பிக்கு தெரிய வந்த நிலையில் இது தொடர்பாக நேற்று  பேசச் சென்றுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது, மயங்காத்தாள், கார்த்தி, சரவணக்குமார் மற்றும் பிருந்தா, அவரது தம்பி சுஷாந்த், தந்தை அன்பழகன்,  உறவினர் ஸ்ரீராம் ஆகியோரிடையே  தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மயங்காத்தாள் கீழே விழுந்து மரக்கட்டிலில் மோதி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, மயங்காத்தாள்(62) நேற்று  இரவு உயிரிழந்தார்.

இது தொடர்பாக மயங்காத்தாளின் கணவர் ராமசாமி அளித்த புகாரின் பேரில், மருமகள் பிருந்தா (26), அவரது தம்பி சுஷாந்த், உறவினர் ஸ்ரீராம், பிருந்தாவின் தந்தை அன்பழகன் ஆகியோர் மீது 15 வேலம்பாளையம் போலீஸார்  6 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.