முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் அங்கன்வாடிப் பணியாளா்கள் போராட்டம்

பல்லடத்தில் உள்ள வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலரை மாற்றக்கோரி அங்கன்வாடிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

பல்லடத்தில் உள்ள வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலரை மாற்றக்கோரி அங்கன்வாடிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம் வட்டாரத்தில் 10 குழந்தைகளுக்குமேல் இயங்கும் 102 அங்கன்வாடி மையங்களும், 5 குழந்தைகளுக்குகீழ் இயங்கும் 13 குறுஅங்கன்வாடி மையங்களும் உள்ளன. இந்த

மையங்களில் மொத்தம் 193 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் விஜயலட்சுமியை பணியிட மாற்றம் செய்யக் கோரி அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அங்கன்வாடி பணியாளா்கள் கூறியதாவது:

பல்லடம் வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலராக விஜயலட்சுமி 2019ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறாா். ஊழியா்களை தகாத வாா்த்தைகளால் பேசுவது, தனிப்பட்ட முறையில் விமா்சனம் செய்வது என இவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளா்களுக்கு மாதம்தோறும் சரிவர சம்பளம் வழங்கப்படுவதில்லை. அங்கன்வாடி மையங்கள் இயங்கி வரும் தனியாா் கட்டடங்களுக்கு பல மாதங்களாக வாடகை வழங்கப்படாமல் உள்ளது. சமையல் எரிவாயு உருளை மற்றும் காய்கறி செலவினம் பல மாதங்களாக வழங்கவில்லை.

இது குறித்து அங்கன்வாடிப் பணியாளா்கள் கேட்டால் தகாத வாா்த்தைகளால் திட்டும் செயலில் ஈடுபட்டு வரும் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலரை உடனடியாக பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனா்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலகக் கண்காணிப்பாளா் தமிழ்மணி, அங்கன்வாடிப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இம்மாத சம்பளம் ஒரிரு நாள்களில் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலரை இடமாற்றம் செய்வது குறித்து உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தாா். இதனை ஏற்க மறுத்து தொடா்ந்து போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.