திருப்பூரில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றியடைவார்கள்: ஓபிஎஸ்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் அனைத்து இடங்களில் வெற்றியடைவார்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் அனைத்து இடங்களில் வெற்றியடைவார்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலையும், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையும் வகித்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வரவேற்புரையாற்றினார். இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தொழில் நகரமான திருப்பூருக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொடுத்துள்ளது அதிமுக அரசு. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.கடந்த 1972 ஆம் தொடங்கிய இந்தக்கட்சி மூலமாக பல்வேறு திட்டங்களை நாட்டுமக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
இதன் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அதன் பிறகு அவரது பாதையில் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த நான்கு ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தியுள்ளார். அதிலும் நாட்டு மக்களுக்கு தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மக்களைப்பற்றியும், நாட்டைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.
அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரம் தொழில் சார்ந்த அனைத்து நிலைகளிலும் வளர்ந்து வரும் நகராக உள்ளது. இதற்கு தொலைநோக்குப் பார்வையுடன் வகுத்த திட்டங்கள்தான் என்றால் அதுமிகையாகாது. திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ரூ.1,062 கோடியில் அவிநாசி-அத்திக்கடவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதே போல, திருப்பூர் மாவட்டத்துக்கு 4 குடிநீர் புதிய திட்டங்கள், ரூ.686 கோடியில் பாதாள சாக்கடைத்திட்டம், ரூ.336 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி, குடிசைமாற்று வாரியத்தின் மூலமாக ரூ.150 கோடியில் 2,250 அடுக்குமாடி குடியிருப்புகள் அதிமுக ஆட்சியில்தான் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பொலிவுறு நகரம் திட்டமும் ரூ.950 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி ரூ.12,110 கோடியில் விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களின்போது மக்களுக்கு பாதுகாப்பு அளித்ததுடன், உரிய நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 9 மாதங்களில் எந்தவாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. முதியோர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல், மகளிர் கணக்கில் மாதந்தோறும் ரூ.ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்துவது, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவது உள்ளிட்ட எந்தத்திட்டங்களையும் நிறைவேற்றப்படவில்லை.
இதனைத் தற்போது மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றியடைவார்கள் என்றார்.
இந்தக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி.சிவசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், சி.மகேந்திரன், திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளருமான எஸ்.குணசேகரன், கரைப்புதூர் ஏ.நடராஜன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.