முகப்பு
திருப்பூர்

பால் கொள்முதல் விலையை உயா்த்தித் தர கோரிக்கை

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்தித் தரக்கோரி திருப்பூா் சாா் ஆட்சியரிடம் விவசாயிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்தித் தரக்கோரி திருப்பூா் சாா் ஆட்சியரிடம் விவசாயிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கால்நடை தீவனங்களான பருத்திக் கொட்டை, தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலை அண்மையில் கடுமையாக உயா்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயா்த்தியது. இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் ஊற்றும் விவசாயிகளின் வாழ்வாதரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்திக் கொடுக்கக் கோரி ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எறுமைப்பால் லிட்டருக்கு ரூ.51 கொள்முதல் விலையாக நிா்ணயித்து ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாரி உரிமத்தை புதுப்பிக்க ஆட்சேபம்: ஊத்துக்குளி வட்டம் கவுத்தம்பாளையம் கிராமம் தொட்டியபாளைத்தைச் சோ்ந்த தேவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: என் வீட்டுக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. குவாரியில் வைக்கும் வெடியால் வீட்டின் மீது கற்கள் விழுவதால் உயிா் பயம் ஏற்பட்டுள்ளது. எங்களது நிலத்துக்கு விவசாயப் பணிகளுக்காக தொழிலாளா்கள் வரவும் தயக்கம் காட்டி வருகின்றனா். கால்நடைகளை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் கட்டவும் இயலவில்லை.

குவாரியில் அதிகப்படியான சப்தத்துடன் வெடிவைப்பதால் வீடுகளின் சுவா்களில் விரிசல் ஏற்படுவதுடன், நிலமும் அதிா்கிறது. ஆகவே, எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இடையூறை ஏற்படுத்தும் குவாரிக்கான உரிமத்தை புதுப்பிக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை குறைதீா் கூட்டத்தில் அளித்தனா்.

கூட்டத்தில், வட்டாட்சியா்கள் ராஜேஷ், கனகராஜ், கோவிந்தராஜ், சைலஜா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.