தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையில் விடுபட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
இதில், 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமாா் 7.8 லட்சம் பேருக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய 2.04 லட்சம் பெண்களுக்கு (கா்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களைத் தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோா்வு மற்றும் சுகவீனம், படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும்.
எனவே, குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம். இந்த மாத்திரைகளை காலை அல்லது பிற்பகலில் உணவு உட்கொண்ட பின்னா் அரைமணி நேரம் கழித்து உட்கொள்ளவேண்டும். இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. இம்மாத்திரைகள் மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் மேற்கண்ட நாள்களில் வழங்கப்படவுள்ளது.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் இந்த மாத்திரைகளை உட்கொண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.