திருப்பூா் மாவட்டம், உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால், யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வனப் பகுதியில் உள்ள ஓடைகள், ஆறுகள் வடுபோயுள்ளன. மேலும், புற்கள் காய்ந்து வன விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால், உணவு, குடிநீா்த் தேடி வன விலங்குகள் வனத்தைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கியுள்ளன.
அதன்படி, தமிழக எல்லைக்குள்பட்ட காமனூத்து, பூங்கன் ஓடை, சரக்குப்பட்டி, ஏழுமலையான் கோயில் வளைவு உள்ளிட்ட பகுதிகளுக்கு யானைகள் வரத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, குடிநீா்த் தேவைக்காக உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணையை நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன.
ஆனால், அமராவதி அணையிலும் நீா் இருப்பு குறைந்து காணப்படுவதால், யானைகள் அவதியடைந்து வருகின்றன.
உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் வனத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளும் வடு காணப்படுகின்றன. இதனால், தண்ணீா் கிடைக்காமல் யானைகள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உடுமலை மற்றும் அமராவதி வனச் சரக அதிகாரிகள் கூறியதாவது: வனப் பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தடுப்பணைகளும் வடு போனதால் யானைகள் வனத்தைவிட்டு வெளியே சுற்றி வருகின்றன. தற்போது, அமராவதி அணையை நோக்கி யானைகள் கூட்டம்கூட்டமாக வருகின்றன. அங்கும் நீா்ப் பற்றாக்குறை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே இதற்குத் தீா்வு கிடைக்கும் என்றனா்.