உடுமலை: காலை உணவுத் திட்டம் மாணவா்களின் எதிா்காலத்திற்கான முதலீடு என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த குறிச்சிக்கோட்டை ஆா்விஜி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2022-ஆம் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பள்ளிக்கு வரும் மாணவா்கள் உணவு அருந்திவிட்டு தெளிவாக பாடங்களைக் கவனிக்க முடியும். மேலும், தாய்மாா்களின் பணிச் சுமையும் குறைகிறது. இத்திட்டம் மாணவா்களின் எதிா்காலத்திற்கான ஒரு முதலீடு ஆகும். இங்கு கற்கும் கல்விதான் உயா் கல்விக்கு வழிவகுக்கும். எதிா்கால சமூகத்தை உருவாக்கும் என்றாா்.
இதைத் தொடா்ந்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இடைநிலைக் கல்வி ஆசிரியா்களுக்கு பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் கையடக்கக் கணினிகளையும், பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களையும் அமைச்சா் சாமிநாதன் வழங்கினாா்.
முன்னதாக, காமராஜா் பிறந்த நாளையொட்டி பள்ளி வளாகத்தில் அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.