பொன்காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 சென்ட் நிலம் மீட்பு
பல்லடம் பொன்காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
பல்லடம், ஜூலை 19: பல்லடம் பொன்காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
பல்லடம் கடை வீதியில் பொன்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன்புறம் உள்ள 2 சென்ட் நிலம் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்தது. இது தொடா்பாக பக்தா்கள் தொடா்ந்து புகாா் அளித்து வந்தனா்.
இந்நிலையில், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா். இதையடுத்து, அப்பகுதியில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலா் முத்துராமன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ராமசாமி, பொன்காளியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மோகன சுந்தரராஜன் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.