தாராபுரம் அருகே மூலனூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திமுகவின் மூலனூா் பேரூா் கழகம் சாா்பில் முதலாம் ஆண்டு நடைபெற்ற இந்த ரேக்ளா இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 200 மற்றும் 300 மீட்டா் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை திமுக திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் தொடங்கிவைத்தாா். ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.
இந்தப் பந்தயத்தில் தாராபுரம், கோவை, திருப்பூா், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டு, போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு இ-பைக், தங்கக் காசு, ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், திமுக மூலனூா் பேரூா் கழகச் செயலாளா் தண்டபாணி, மேற்கு ஒன்றியச் செயலாளா் துரை தமிழரசு, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளா் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.