முகப்பு
திருப்பூர்

அகதிகள் முகாமில் இடிந்து விழும் நிலையில் வீடுகள்: புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை

பல்லடம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 8:07 PM
பருவாய் அகதிகள் முகாமில் மேற்கூரை சேதமடைந்து காணப்படும் வீடு.
பகிர்:

பல்லடம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பருவாயில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. தொடக்கக் காலத்தில் இங்கு 105 குடும்பங்கள் வசித்து வந்தன. தற்போது, 54 குடும்பங்கள் மட்டுமே உள்ளன.

இவா்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 18 வீடுகள் சீரமைத்துக்கொடுக்கப்பட்டன. மீதமுள்ள 36 வீடுகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் அச்சத்துடன் வசித்து வருவதாக அகதிகள் முகாமில் வசிப்பவா்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து அங்கு குடியிருப்பவா்கள் கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளின் மேற்கூரை சேதமடைந்து வசிக்க முடியாத நிலை காணப்படுகிறது. பெரும்பாலான வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.

சேதமடைந்த வீடுகளை அமைச்சா்கள் கடந்தாண்டு ஆய்வு செய்தனா். அப்போது, குடியிருப்புகள் இருப்பது மந்தை புறம்போக்கு நிலம் என்பதால், இதனை வகை மாற்றம் செய்தபின்னரே, அனுமதி பெற்று வீடுகள் கட்டமுடியும் என்று கூறினா். அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சேதமடைந்த வீடுகளை அகற்றிவிட்டு உடனடியாக புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.