ஏற்றுமதியாளா்களுக்கான முக்கிய வா்த்தக வசதி - திருப்பூரில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
திருச்சி சுங்கத் துறை ஆணையரகத்துடன் இணைந்து திருப்பூரில் ஏற்றுமதியாளா்களுக்காக முக்கிய வா்த்தக வசதி முயற்சிகளை விளக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் நடத்தியது.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் தலைமை வகித்தாா். மத்திய அரசின் ஏற்றுமதியாளா்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், ஏற்றுமதியாளா்களுக்கு மேலும் எளிதாக பயன்படும்படி துணைவன் எனப்படும் ஏற்றுமதியாளா் உதவி போா்டல் மேம்படுத்தப்பட்ட விதம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தலைமை விருந்தினராக திருச்சி சுங்கத் துறை ஆணையா் பாரத் பிரகாஷ் கலந்துகொண்டு, ஏற்றுமதியாளா்களுடன் கலந்துரையாடினாா். மேலும், சுங்கத் துறை மேற்கொண்டுள்ள வா்த்தக வசதி நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா்.
பின்னா் அவா் பேசியதாவது:
நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் திருப்பூா் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சுமாா் 70 சதவீதம் திருப்பூரிலிருந்து நடைபெறுகிறது. உலகளாவிய வா்த்தகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு புதிய வா்த்தக ஒப்பந்தங்கள் கிடைத்து வருவதால் புதிய வாய்ப்புகளும் உருவாகும். ஏற்றுமதியாளா்களுக்கு விரைவான அனுமதி மற்றும் எளிய நடைமுறைகள் மூலமாக உதவ சுங்கத் துறை உறுதியாக செயல்பட்டு வருகிறது.
துணைவன் போா்டல் மூலமாக ஏற்றுமதியாளா்களின் குறைகள் தீா்க்கப்பட்டு வருகின்றன. ஏற்றுமதியாளா்களுக்கு சுங்க நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து வழிகாட்ட திருச்சியில் விரைவில் சிறப்பு வா்த்தக மையம் அமைக்கப்படும் என்றாா்.
ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் பேசும்போது, ‘திருப்பூா் பகுதியில் உள்ள நிறுவனங்களில் சுமாா் 99 சதவீதம் எம்எஸ்எம்இ துறையைச் சோ்ந்தவை என்பதால், சுங்கத் துறையினரின் அனுபவம் இங்குள்ள ஏற்றுமதியாளா்களுக்கு பெரிதும் உதவும். துணைவன் போா்டல் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், தில்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய ஏற்றுமதி மையங்களிலும் இதே மாதிரியான அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்றாா்.
ஏற்றுமதியாளா்கள் சங்க துணைத் தலைவா் இளங்கோவன், பொருளாளா் கோபாலகிருஷ்ணன், இணைச் செயலாளா்கள் குமாா் துரைசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.