முகப்பு
தருமபுரி

கல்வி உதவித்தொகை கையாடல் விவகாரம்: தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தப்படுமா?

நாமக்கல், ஆக.4:  நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ள கல்வி உதவித்தொகை கையாடல் குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டப் பள்ளிகள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலங்களில் விரிவான விசாரணை நடத்த

Updated On : 26 செப்டம்பர், 2012 at 11:07 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:52 PM

நாமக்கல், ஆக.4:  நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ள கல்வி உதவித்தொகை கையாடல் குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டப் பள்ளிகள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலங்களில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக 1975-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் தகுதியுடைய குழந்தைகளுக்கு தலா ரூ.1,850 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மற்ற உதவித்தொகை திட்டங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி, முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக மாணவர்களின் பட்டியல் பெறும் நிலையில், இந்த உதவித்தொகைத் திட்டத்தில் மட்டும் நேரடியாகப் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் இருந்தே மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலகத்துக்கு பட்டியல் பெறப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்தந்த தலைமையாசிரியர்களுக்கே கீறா காசோலையாகவே (ர்ல்ங்ய் ஸ்ரீட்ங்வ்ன்ங்) அளிக்கப்படுகிறது.

 இந்த வாய்ப்பை அடுத்து நாமக்கல் மாவட்டத்திலுள்ள 77 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சுகாதாரமற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமன்றி பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளின் பெயர்களையும் பட்டியலில் சேர்த்து 2010-11, 2011-12-ம் கல்வியாண்டில் ரூ.68.46 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

 தரகர்கள் உதவியுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை ஊழியர்களே நேரடியாக தலைமையாசிரியர்களிடம் பேசி அனைத்து மாணவர்களின் பெயர்களிலும் பட்டியல் தயாரித்தும், அந்தப் பட்டியலை அப்படியே ஏற்று மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலகத்திலிருந்து உதவித்தொகை அனுமதிக்கப்பட்டும் உள்ளது. பிறகு அந்தந்தத் தலைமையாசிரியர்களிடம் இருந்து பகுதி அளவு உதவித்தொகையை தரகர்களும், மாவட்ட ஆதிதிராவிடர் நல ஊழியர்களும் பெற்றுக்கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 இதில், முதல்கட்டமாக சம்பந்தப்பட்ட 77 பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர்,  ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

 ஆட்சியருக்கு வந்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் இந்த மெகா மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 ஆனால், புகார் வரப்பெறாமலும், விசாரணை மேற்கொள்ளப்படாமலும் தமிழகம் முழுவதும் பல மாவட்டப் பள்ளிகளில் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் பெரும் கையாடல்கள் நடந்திருக்கக் கூடும் என்றே நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி நிர்வாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் துரைகுமாரவேலு கூறியது:

 சுகாதாரமற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் என்பவர்கள், ஒரு பள்ளியில் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பர். ஆனால், பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளும் சுகாதாரமற்ற தொழிலாளர்களின் குழந்தைகளாகப் பட்டியலில் சேர்த்து பல லட்சம் ரூபாய் கையாடல் நடந்துள்ளது என்றால், இதே திட்டத்தின் கீழ் பல மாவட்டங்களிலும் இதுபோல மோசடிகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

 எனவே, அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை மீது மாவட்ட நிர்வாகங்கள் விரிவான விசாரணை நடத்த வேண்டும். கையாடல் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க  வேண்டும். இதற்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்திலிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். இதுகுறித்து, ஊழல் எதிர்ப்பு இயக்கம் தமிழக அரசுக்கு மனு அனுப்பும் என்றார் அவர்.

 நாமக்கல் மாவட்டத்தில் இரு கல்வி ஆண்டுகளில் நடந்துள்ள மோசடி மட்டுமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதால்,  2010-11 கல்வி ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளிலும் வழங்கப்பட்டுள்ள உதவித் தொகைகள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

 இதுகுறித்து, நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கூறியது:

நாமக்கல் மாவட்டத்தில், கையாடல் உறுதி செய்யப்பட்ட 77 தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 2010-ம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை பட்டியலின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்படும்.  கையாடல் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.