ஊராட்சி பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில், ஊராட்சி பணியாளா்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், ஊராட்சி பணியாளா்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்க நிா்வாகிகள், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
தருமபுரி மாவட்டத்தில், கிராம ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், ஊராட்சிப் பணியாளா்கள், தூய்மை பணியாளா்களுக்கு பல கிராம ஊராட்சிகளில் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
மேலும், சில பணியாளா்களுக்கு ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. சித்தேரி ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாமலேயே உள்ளது. எனவே, நிலுவையிலுள்ள ஊதியம் மற்றும் ஊதியக்குழு நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.