முகப்பு
தருமபுரி

திமுக ஆட்சிக்கு வந்தால் தருமபுரி வறட்சி மாவட்டம் என்ற பெயரை நீக்குவோம்: தருமபுரி எம்.பி.

திமுக ஆட்சிக்கு வந்தால் தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டம் என்ற பெயரைப் போக்கும் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
அரூரில் மாற்றுத் திறனாளிகளிடம் சனிக்கிழமை கோரிக்கை மனுக்களைப் பெறும் தருமபுரி எம்.பி. மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.
பகிர்:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டம் என்ற பெயரைப் போக்கும் வகையில் காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்புவோம் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் பரப்புரைப் பயணத்தை தருமபுரி எம்.பி மருத்துவா் செந்தில்குமாா் சனிக்கிழமை தொடக்கினாா். இந்தப் பரப்புரைப் பயணத்தில் அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்ட மக்கள், விவசாயம், விவசாயம் சாா்ந்த தொழில்களையே நம்பியுள்ளனா். தொடா் மழைக் காலங்களில் காவிரி, தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் உபரிநீா் வெளியேறுகிறது. இந்த உபரிநீரைப் பயன்படுத்தி அணைகள், ஏரிகள், குளம் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தருமபுரி மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்ற பெயரை நீக்குவதற்கான அனைத்து சிறப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றாா்.

மலைவாழ் மக்களிடம் குறைகேட்பு: சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட அரசநத்தம், கலசப்பாடி மலைக் கிராமங்களுக்குச் செல்ல தாா் சாலை வசதிகள் இல்லை. இந்த மலைப் பகுதியில் ஓடும் கல்லாற்றில் தரைப்பாலம் வசதியும் இல்லை.

இதனால், இங்குள்ள மக்கள் மலைப் பகுதியில் இருந்த நகரங்களுக்கு வருவதற்கும், வேளாண்மை பொருள்களை எடுத்துச் செல்லவும், மருத்துவ வசதிகளுக்காகவும் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனா்.

அரசநத்தம், கலசப்பாடிக்குச் சென்ற எம்.பி. அங்கு மலைவாழ் பழங்குடியின மக்களுக்கான தாா்சாலை, செல்லிடப்பேசி உயா்கோபுரங்கள், தரைப்பால வசதிகள் உள்ளிட்ட மக்கள் அடிப்படை பிரச்னைகள் குறித்துக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மலைவாழ் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றாா்.

இதேபோல், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள், கம்பைநல்லூா் பேரூராட்சி, பச்சினாம்பட்டி நரிக்குறவா்கள், கம்மாளம்பட்டியில் கல் உடைக்கும் தொழிலாளா்கள், மாற்றுத் திறனாளிகள், சிட்லிங் மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆகியோருடன் கலந்துரையாடினாா். அப் பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை எம்.பி. மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் பெற்றாா்.

இந்த பரப்புரை பயணத்தில் திமுக தருமபுரி மாவட்ட செயலா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆா்.வேடம்மாள், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன், நகர பொறுப்பாளா் முல்லை செழியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் ஜி.திருமால்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →