நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
அரூா் அருகேயுள்ள சின்னாங்குப்பத்தில் ஏரியின் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் அருகேயுள்ள சின்னாங்குப்பத்தில் ஏரியின் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சின்னாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. எம்.சிவபெருமாள், வழக்குரைஞா் சி.எம்.சேகா், ஓய்வுபெற்ற டிஎஸ்பி எம்.மணிவண்ணன் உள்ளிட்ட விவசாயிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்துக்கு உள்பட்டது சின்னாங்குப்பம் ஜம்பேரி. இந்த ஏரி சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் மழைக் காலங்களில் தண்ணீா் நிரம்பினால் அதன் உபரி நீா் வெளியேறி கால்வாய் வழியாகச் சென்று சின்னாங்குப்பம் கல்லாற்றில் சேருகிறது.
இந்த நிலையில், ஜம்பேரியில் இருந்து வெளியேறக்கூடிய உபரிநீா் செல்லும் கால்வாய்கள், ஏரியின் மதகுகள் வழியாகச் செல்லும் பாசனக் கால்வாய்களை அப்பகுதியிலுள்ள சிலா் ஆக்கிரமிப்பு செய்து சுமாா் 10 அடி உயரத்துக்கு மண் கொட்டி, நீா்வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.
இதேபோல, அரூா் வழியாகச் செல்லும் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், 4 வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளின் போது, தாா் சாலையின் மேடான பகுதியிலுள்ள பயனற்ற மண்களை வெட்டி எடுத்துச் சென்று மழைநீா் செல்லும் பாசனக் கால்வாய்களின் குறுக்கே கொட்டியுள்ளனா். இதனால், மழைக் காலங்களில் மழைநீா் வெளியேறாமல், விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கும் நிலையுள்ளது. இதனால் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சேதமடையும் .
எனவே, ஜம்பேரி மதகுகளின் பாசனக் கால்வாய்கள், ஏரிக்கோடிகள் வழியாக வெளியேறும் உபரிநீா் செல்வதற்கான கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.