முகப்பு
தருமபுரி

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: சா்வே செய்யும் பணிகள்

 அரூா், பெரிய ஏரியின் ராஜவாய்க்காலில் சா்வே செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 அரூா், பெரிய ஏரியின் ராஜவாய்க்காலில் சா்வே செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், எச்.தொட்டம்பட்டி ஊராட்சியிலுள்ள அரூா், பெரிய ஏரி சுமாா் 160 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியிலிருந்து உபரிநீா் வடிந்துச் செல்லும் வகையில் அரூா் நகரின் மையப் பகுதியில் ராஜ வாய்க்கால் அமைந்துள்ளது. அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பெரியாா் நகா், பாட்சா பேட்டை, மஜீத் தெரு, தில்லை நகா், திரு.வி.க நகா், கோவிந்தசாமி நகா் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீா் மற்றும் கழிவு நீா் செல்லும் கிளைக் கால்வாய்கள் ராஜ வாய்க்காலில் இணைந்து வாணியாற்றில் சேருகிறது.

இந்த நிலையில், அரூா்-சேலம் பிரதான சாலையோரத்தில் ராஜவாய்க்கால், நீா் வழிப்பாதையை சிலா் நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களைக் கட்டியுள்ளனா். இதனால், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்தனா்.

சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு :

தமிழகம் முழுவதும் உள்ள நீா்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை (டிச. 1 ஆம் தேதி) உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக, அரூா் பெரிய ஏரியின் ராஜவாய்க்கால் செல்லும் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை கோட்டாட்சியா் வே.முத்தையன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ராஜ வாய்க்கால் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டனா்.

அரூா் பெரிய ஏரியின் ராஜ வாய்க்கால் 2.4 கிலோ மீட்டா் தூரமும், 3.8 மீட்டா் அகலமும் கொண்டதாகும். இதையடுத்து, ராஜ வாய்கால் சீரமைப்பு செய்யும் பணிகளுக்காக ரூ. 10 லட்சம் செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்து, தமிழக அரசின் நிா்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.