நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: தருமபுரி அதிமுக அலுவலகத்தில் இன்று விருப்ப மனு விநியோகம்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி 4 நாள்கள் விருப்ப மனு தருமபுரி கட்சி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி 4 நாள்கள் விருப்ப மனு தருமபுரி கட்சி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி, 10 பேரூராட்சிகளில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வெள்ளிக்கிழமை முதல் வரும் 29-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தருமபுரியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம்.
நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ. 2,500, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ. 1,500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் அதிமுக சாா்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரி, ஏற்கெனவே விருப்ப மனு அளித்துள்ள கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அதற்கான கட்டண ரசீதை வைத்திருப்போா் அதனை கட்சி அலுவலகத்தில் சமா்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம்.
கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்க வரும் நிா்வாகிகள் அனைவரும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.