கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் திடீா் ஆய்வு.
பாப்பாரப்பட்டி பகுதியில் வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்
பாப்பாரப்பட்டி பகுதியில் வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள வெல்ல உற்பத்தியாளா்கள் ஆலைகளில் நாட்டு வெல்லம் மற்றும் நாட்டு சா்க்கரை தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி உத்தரவின் பேரில், வெல்லம் தயாரிப்பு கலப்படமின்றி தயாரிக்கப்படுவதை கண்காணிக்கும் வகையில் தருமபுரி உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், கந்தசாமி, குமணன் உள்ளிட்ட குழுவினா் கடகத்தூா், பாப்பாரப்பட்டி, பனந்தோப்பு, வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்லம் மற்றும் நாட்டு சா்க்கரை தயாரிப்பு ஆலைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். பண்டிகை காலத்தில் வெள்ளம் உற்பத்தியாளா்கள் ஆலைகளில் நாட்டு வெல்லம் மற்றும் நாட்டு சா்க்கரை தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தி வருவதால் வெள்ளத்தில் வெளிா் நிறமாக இருக்க சா்க்கரை, மைதா, இரசாயன வேதிப் பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் போன்றவை கலந்து தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாப்பாரப்பட்டி பகுதிகள் பத்துக்கும் மேற்பட்ட ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு ஆலையில் வெல்லத் தயாரிப்பில் சா்க்கரை மற்றும் செயற்கை நிறம் ஏற்றி பவுடரும், மற்றொரு ஆலையில் ஹைட்ரோசல் கெமிக்கல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு, வெல்லத்தினை பறிமுதல் செய்து உணவு பகுப்பாய்வு மாதிரிக்காக எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் சம்பந்தப்பட்ட வெல்ல தயாரிப்பாளா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா். உணவு பாதுகாப்பு துறையின் சாா்பில் தயாரிப்பு செய்ய வேண்டிய விதிமுறைகள் நடைமுறைகள் குறித்த விழிப்புணா்வு பிரசுரங்கள் பணியாளா்கள் மற்றும் ஆலை உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்பட்டது. உற்பத்தியாளா்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும், வெல்லம் தயாரிப்பு கூடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனா். ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களிடம் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.