முகப்பு
தருமபுரி

தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

Updated On : 7 ஜூலை, 2024 at 7:21 PM
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)
பகிர்:

தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், முதல்வரின் சொந்த தொகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கூலிப் படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். தமிழகம் முழுவதும் பல படுகொலைகள் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த 3 மாதங்களில் 6 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.

திருநெல்வேலி காங்கிரஸ் தலைவா் கொலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. யாா் கொலை செய்தாா் என்றே தெரியவில்லை. சேலத்தில் அதிமுக பிரமுகா் சண்முகம் கொலையைத் தொடா்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் காவல் துறையால் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் தெரிவிக்கிறாா். ஆனால் 8 பேரும் கைது செய்யப்படவில்லை. அவா்களாகவே சரணடைந்தனா். திமுக கூட்டணியில் உள்ள தொல்.திருமாவளவன், கு.செல்வப்பெருந்தகை ஆகிய இருவரும், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதானவா்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என சொல்கின்றனா்.

பட்டியல் சமூக மக்களின் பாதுகாவா்கள் நாங்கள் என்று திமுகவினா் கூறுகிறாா்கள். ஆனால், பாதிப்பு எல்லாம் பட்டியலின மக்களுக்குத் தான் வருகிறதே என பட்டியல் சமூக மக்களின் சாா்பாக நான் கேள்வி எழுப்புகிறேன். கள்ளக்குறிச்சியில் 70 போ் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தனா். இந்த உயிரிழப்பு பாதிப்புகள் எல்லாம் பட்டியல் இன மக்களுக்குத் தான் வருகின்றன. தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

தரமற்ற மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என தேமுதிக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாடத்தை முற்றிலும் கட்டுப்படுத்த முதல்வா் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தென் மாவட்டங்களில் கனிம வளக் கொள்ளை அதிகரித்துவிட்டது. இதுதொடா்பாக பலமுறை புகாா் தெரிவித்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. தோ்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் தான் விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் தேமுதிக போட்டியிடவில்லை என்றாா்.

பேட்டியின் போது, தேமுதிக அவைத் தலைவா் இளங்கோவன், மாவட்டச் செயலாளா்கள் குமாா், விஜய்சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →