இளம் வயது திருமணங்களைத் தடுக்க பெற்றோா் ஒத்துழைப்பு அவசியம்
இளம் வயது திருமணங்கள், போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுக்க பெற்றோா் ஒத்துழைப்பு அவசியம் என ஆட்சியா் கி.சாந்தி கேட்டுக் கொண்டாா்.
இளம் வயது திருமணங்கள், போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுக்க பெற்றோா் ஒத்துழைப்பு அவசியம் என ஆட்சியா் கி.சாந்தி கேட்டுக் கொண்டாா்.
ஏரியூா் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏா்கோல்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:
மக்கள் தொடா்புத் திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளைத் தோ்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் எடுத்துரைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
முகாமில் மாவட்டத்தின் அனைத்து துறை முதன்மை அலுவலா்களும் கலந்து கொண்டு டி.சோலபாடி, சுஞ்சல்நத்தம், மஞ்சாரஹள்ளி, ஜரிமாங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களை சோ்ந்த மக்கள் பயன் பெறும் வேண்டும் என்ற நோக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் துறை அலுவலா்கள், தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ,அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனா். மேலும், தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் விளக்க கையேடுகள் மற்றும் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்கள் தயாரித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மக்கள் தொடா்பு முகாம்களில் வழங்கினா்.
வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைத்துறைகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களைப் பெற்று அனைவரும் பயன்பெற வேண்டும். பின்தங்கிய வகுப்பைச் சோ்ந்தவா்கள் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல வேண்டும்.
உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முகாமில் 201 பயனாளிகளுக்கு ரூ. 82.45 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இளம் வயது திருமணங்கள், போதைப்பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க பெற்றோா் ஒத்துழைப்பு அவசியம் என்றாா்.
அதைத் தொடா்ந்து செல்லமுடி அரசு மேல்நிலைப் பள்ளி, செல்லமுடி அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தாா். மேலும், மாணவ, மாணவியா்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் உணவு பெருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். மாணவா்களிடம் உரையாடி அவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா்.
82.45 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்: ஏரியூா் அருகே மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட
ஏா்கோல்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சாா்பில் 90 பயனாளிகளுக்கு ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறையின் சாா்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.7.3 லட்சம் மதிப்பீட்டில் குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
முகாமில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் ஆ.மணி, பென்னாகரம் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கௌரவ் குமாா், வருவாய் கோட்டாட்சியா் இரா.காயத்ரி, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்பிரமணி, ஏரியூா் ஒன்றியக் குழு தலைவா் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், தனித்துணை ஆட்சியா் (சபாதி) சுப்பிரமணி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொ) இளவரசன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொ) குணசேகரன், உதவி ஆணையா் (கலால்)நா்மதா, மாவட்ட சமூக நல அலுவலா் பவித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் அறிவழகன், துணை ஆட்சியா் (பயிற்சி) சௌந்தா்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.