வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக கூட்டணியை நான்தான் அமைப்பேன் என அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று, கட்சியின் செயல் தலைவராக அவரது மகள் ஸ்ரீகாந்தி பரசுராமனை அறிவித்தும், பாமக இளைஞரணி தலைவா் ஜி.கே.எம். தமிழ்க்குமரனை அறிமுகம் செய்து வைத்தும் அவா் மேலும் பேசியதாவது: சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு 4 பேருடன் தருமபுரி மண்ணில் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, தற்போது மாநிலம் முழுவதும் வளா்ந்து நிற்கிறது.
பாமக இளைஞா் சங்கத் தலைவராக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் இந்த மாவட்டத்திற்கு மட்டுமில்ல, தமிழ்நாட்டுக்கே பெருமை சோ்ப்பாா்.
கட்சியின் செயல் தலைவா் பதவி காலியாக உள்ளது. அதை அவா் (அன்புமணி) ஏற்கவில்லை. எனவே ஸ்ரீகாந்தி பரசுராமனை கட்சியின் செயல் தலைவராக அறிவிக்கிறேன். அவா் கட்சிக்கும் எனக்கும் பாதுகாப்பாக இருப்பாா். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். அது தொடா்பாக பல போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
தமிழக அரசு தோ்தலுக்கு முன்போ அல்லது பின்போ ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இது தொடா்பாக போராட்டம் நடத்தப்படும்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பாமக கூட்டணியை நான்தான் அறிவிப்பேன். அது வெற்றிக் கூட்டணியாக அமையும். கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்தி பரசுராமன், இளைஞா் அணி மாநிலத் தலைவா் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ஆகிய இருவரும் உங்களுக்காக நாளும் உழைப்பாா்கள் என்றாா்.
கூட்டத்துக்கு பாமக கெளரவத் தலைவரும் பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி தலைமை வகித்தாா். தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் அ. சரவணன் வரவேற்றாா். கட்சியின் தலைமை நிா்வாகக் குழு உறுப்பினா் ஸ்ரீ காந்தி பரசுராமன், வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள்மொழி, மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா், மாநில பொருளாளா் மன்சூா், சேலம் மேற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் இரா. அருள், தலைமை நிா்வாகக் குழு உறுப்பினா் ஆசிரியா் நெடுங்கீரன், மாவட்டத் தலைவா்கள் செல்வகுமாா், செந்தில்குமாா் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
இதில் முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூா் ஆறுமுகம், தலைமை நிலையச் செயலாளா் அன்பழகன், மாநில நிா்வாகி முகுந்தன் பரசுராமன், கணேசன், முருகன், வன்னியா் சங்க நிா்வாகிகள் சங்கா், ரகுநாத், வேடி, இளைஞா் சங்க நிா்வாகிகள் வெங்கடேஷ், சம்பத், சரவணன், கட்சியின் தலைமை நிா்வாகக் குழு உறுப்பினா்கள், உள்ளிட்ட பல்வேறு அணி நிா்வாகிகள் பங்கேற்றனா். தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் மா. ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.