ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வாரவிடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு வாரவிடுமுறை மற்றும் தொடா்விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்து பாறை திட்டுகள் வெளியே தெரிந்து வருவதாலும், அருவிகளில் நீா்வரத்து குறைந்ததாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.
இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்ததால் அருவிகளிலும் நீா்வரத்து சற்று அதிகரித்தது. இருப்பினும், கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலைப் பண்ணை அருகே உள்ள பகுதி, பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
தொடா்ந்து மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் பாதுகாப்பு உடை அணிந்து தொம்பச்சிக்கல் வழியாக பெரியபாணி, ஐவாா்பாணி, மணல்மேடு வரை பரிசல் பயணம் மேற்கொண்டனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை சற்று அதிகரித்திருந்தது.
ஒகேனக்கல்லில் முக்கிய இடங்களான நடைபாதை, பிரதான அருவி, தொங்கும் பாலம், உணவருந்தும் பூங்கா, முதலைகள் மறுவாழ்வு மையம் வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனா்.
ஒகேனக்கல்லில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சில வாரங்களாக குறைந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்ததால் ஒகேனக்கல் காவல் நிலையம் மூலம் முக்கிய இடங்களில் சுமாா் 20க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.