ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட கிரானைட் கற்கள் பறிமுதல்
ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட கிரானைட் கற்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட கிரானைட் கற்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கா்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக மணல், கிரானைட் கற்கள் போன்ற கனிம வளங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜெயச்சந்திரபானு ரெட்டிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடத்தலைத் தடுக்க சுரங்க மற்றும் புவியியல் துறை உதவி இயக்குநரான (பொ) சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, தனிப்படையினா் தீவிர வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். அந்த வகையில், ஆந்திர-தமிழக மாநில எல்லையான காளிக்கோயிலில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத் துறை உதவி புவியியாளா் முத்து தலைமையில், அலுவலா் வடிவழகன் ஆகியோா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, ஆந்திரத்தில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி 6 கிரானைட் கற்கள் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, கிரானைட் கற்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்து கந்திகுப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
Advertisement
இதேபோல, காவேரிப்பட்டணம், செல்லம்பட்டி சாலையில் கெட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையின் போது உரிய அனுமதி இன்றி டிப்பா் லாரியில் 3 யூனிட் மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த டிப்பா் லாரியை பறிமுதல் செய்து காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து தனித்தனியே வழக்குப் பதிந்து, போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.