சிறுபான்மையினா் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
Advertisement
திட்டம் 1-இன் கீழ், தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ. 20 லட்சமும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 30 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழு கடன் நபா் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் நபா் ஒருவருக்கு ரூ. 1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
மேலும், சிறுபான்மை மாணவ, மாணவியா் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளநிலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ. 20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ் மாணவா்களுக்கு 8 சதவீதம், மாணவியருக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 30 லட்சம் வரையிலும் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.
திட்டம் 1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்புறமாயிருப்பின் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயிருப்பின் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று, அதனை நிறைவு செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.