கிருஷ்ணகிரி அருகே இஸ்லாமிய மாணவர்கள் நோன்பு இருக்க அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தடை விதித்ததால் பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ளது கொரல் நத்தம். இங்கு உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மொத்தம் 177 மாணவிகள் உள்பட 342 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 130 மாணவிகள் உள்பட 256 மாணவர்கள் இஸ்லாமியர்கள். 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக எம்.கலாவதி பணியாற்றி வருகிறார். இந்த இஸ்லாமிய மாணவ, மாணவிகள் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவர்கள் நோன்பு இருந்தால் மயக்கம் ஏற்படும் எனவும் நோன்பு இருப்பதால் சத்துணவு மீதியாவதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மேலும், நோன்பு மேற்கொண்டால் பெற்றோர்களிடம் அனுமதி கடிதம் எழுதி வாங்கி வரவேண்டும் என தெரிவித்தாராம். அந்த பள்ளியில் பணியாற்றும் உடல்கல்வி ஆசிரியர் கே.எஸ். செந்தில்குமார், கணித ஆசிரியர் என் சங்கர் ஆகியோர் இஸ்லாம் மதம் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தலைமையாசிரியர் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்டித்து மன்ற தலைவர் பகதூர்ஷா தலைமையில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். தகவலறிந்த குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் அன்புமணி நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.
ரமலான் நோன்பு இருக்க அனுமதிப்பதாகவும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இஸ்லாம் மாணவர்கள் ரமலான் நோன்பு கடைப்பிடிக்க அரசு பள்ளி ஆசிரியர்கள் தடையாக இருந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.