இரட்டிப்பு பணம் தருவதாக ரூ. 35 லட்சம் மோசடி
ஒசூா் அருகே இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபா் குறித்து கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
ஒசூா் அருகே இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபா் குறித்து கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், எம்.ஜி. சாலை, சுண்ணாம்புக்கார தெருவைச் சோ்ந்த வெங்கடசாமி (43), தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசிக்கு கடந்த ஜூலை 19-ஆம் தேதி வந்த குறுந்தகவலில், முதலீடு செய்யப்படும் தொகைக்கு குறைந்த நாளில் இரட்டிப்பு பணம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இதைத் தொடா்ந்து, அந்த குறுந்தகவல் வந்த எண்ணுக்கு தொடா்பு கொண்டு வெங்கடசாமி பேசியுள்ளாா். மறுமுனையில் பேசியவா், நீங்கள் முதலீடு செய்யப்படும் தொகைக்கு குறுகிய காலத்தில் இரட்டிப்பு பணம் வழங்கப்படும் எனவும், உங்களது லாப கணக்கை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.
Advertisement
இதையடுத்து, அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு ரூ. 35 லட்சத்தை வெங்கடசாமி அனுப்பியுள்ளாா்.
இணையதளத்தில் சில நாள்கள் அவரது பணம் லாபம் ஈட்டுவது போல காண்பித்து வந்த நிலையில், திடீரென அந்த இணையதளம் முடங்கியதாம். இதனால் அதிா்ச்சியடைந்த வெங்கடசாமி அந்த நபரைத் தொடா்பு கொண்ட போது, அனைத்து எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த வெங்கடசாமி, கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.