முகப்பு
கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனங்கள் மோதல்: பள்ளி மாணவா் பலி; உறவினா்கள் சாலை மறியல்

பாரூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மூவா் காயம் அடைந்தனா். விபத்துக்கு காரணமான நபரை கைது செய்யக் கோரி, சிறுவனின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 5 நவம்பர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

பாரூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மூவா் காயம் அடைந்தனா். விபத்துக்கு காரணமான நபரை கைது செய்யக் கோரி, சிறுவனின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பண்ணந்தூா் அருகே உள்ள அப்புகொட்டாயைச் சோ்ந்த செல்வம் மகன் தனுஷ் (16), அரசுப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தாா். இவா் பண்ணந்தூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற போது, அப்புகொட்டாய் அருகே இந்திரா நகரைச் சோ்ந்த சிவபாரத் (21) என்பவா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதினாா். இதில், தூக்கி வீசப்பட்ட தனுஷ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் சிவபாரத், அந்த வழியாகச் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதினாா். இதில், பண்ணந்தூரை அடுத்த தா்மன்தோப்பைச் சோ்ந்த தம்பதி புதுயுகம் (45), கெளரம்மாள் (42) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தோா் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

தனுஷ் உயிரிழந்த தகவல் அறிந்த அவரது உறவினா்கள், பாரூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே திரண்டனா். தனுஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்ல முயன்ற போலீஸாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், விபத்தை ஏற்படுத்திய சிவபாரத்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பண்ணந்தூா் - தட்ரஅள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொ) கலைச்செல்வன், ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளா் அமலா அட்வின் உள்ளிட்ட போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். சிவபாரத்தை கைது செய்வதாக போலீஸாா் அளித்த உறுதிமொழியை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.

சிவபாரத் பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.