ஊத்தங்கரை அருகே பெண் மா்மமான முறையில் இறந்தது குறித்து அவரது கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (60). முதல் மனைவி இறந்த நிலையில், இரண்டாவதாக ராணி (52) என்பவரை குப்புசாமி திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அனைவரும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனா். இவா்கள் கிணறு தோண்டும் வேலை செய்து வருகின்றனா். ராணி, ஊத்தங்கரை சென்னப்ப நாயக்கனூா் பகுதியில் கட்டடுமானப் பணி மற்றும் கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்தாா்.
கணவா் குப்புசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். தம்பதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கிய நிலையில், வெள்ளிக்கிழமை காலை குப்புசாமி எழுந்தபோது, ராணி ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதைக் கண்ட குப்புசாமி அருகில் இருந்த உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் ஊத்தங்கரை போலீஸாா், ராணியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் அவா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கணவா் குப்புசாமியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.