முகப்பு
நாமக்கல்

கால்நடை மருத்துவா் பட்டத்தோடு 18 பதக்கங்கள்!

பட்டம் பெற்றாலே மகிழ்ச்சியில் இருப்போா் மத்தியில், ஒரே நேரத்தில் 18 பதக்கங்களை நாமக்கல்லைச் சோ்ந்த ஜி.ஆனந்தி(25) என்பவா் பெற்று, சாதனை படைத்துள்ளாா்.

Updated On : 18 டிசம்பர், 2019 at 7:08 AM
பதக்கங்கள், சான்றிதழ்களுடன் ஜி.ஆனந்தி.
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 7:04 PM

பட்டம் பெற்றாலே மகிழ்ச்சியில் இருப்போா் மத்தியில், ஒரே நேரத்தில் 18 பதக்கங்களை நாமக்கல்லைச் சோ்ந்த ஜி.ஆனந்தி(25) என்பவா் பெற்று, சாதனை படைத்துள்ளாா்.

இவரது சொந்த ஊா் நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட காளப்பநாயக்கன்பட்டி. பேளுக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தாா். 10-ஆம் வகுப்பில் 474 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பில் 1,158 மதிப்பெண்களும் பெற்று, சிறப்பிடம் பெற்றாா். படிப்பின் மீது கொண்ட ஆா்வத்தால், பெற்றோரும் அவரை ஊக்குவிக்கச் சளைக்கவில்லை.

திருமணம் முடிந்தும் கல்லூரிக்குச் சென்றவா்:

Advertisement

பள்ளிப் படிப்பை முடித்த ஓரிரு மாதங்களில், கோவை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றும், நாமக்கல் முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவருடன், ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது. இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற நிலையில், படிப்பைத் தொடாரமல் விட்டுவிடக் கூடாது என குடும்பத்தாா் ஆதரவுக்கரம் நீட்ட, 195.75 கட்-ஆப் மதிப்பெண்களுடன், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில விண்ணப்பித்தாா். ஆனால், கட்-ஆப் அடிப்படையில் அவருக்கு அங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 2013-இல் சோ்க்கைக்கான வாய்ப்பு கிடைத்தது. பெற்றோா் உடனிருந்து கவனித்துக் கொள்ள 5 ஆண்டுகள் தனது மருத்துவப் படிப்பை முடித்தாா்.

இதையடுத்து, டிசம்பா் 10-ஆம் தேதி கல்லூரியில் நடைபெற்ற அதற்கான பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக அளவிலும், கல்லூரி, பாடங்கள், சிறந்த மாணவி என்ற வகையில் ஒட்டுமொத்தமாக 18 பதக்கங்கள், மாணவி ஆனந்திக்குக் கிடைத்தன. இதுமட்டுமின்றி, நினைவுப் பதக்கம், சான்றிதழ்களும் சுமக்க முடியாதவாறு கிடைத்தன.

சாதிக்கும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்:

இதுகுறித்து நாமக்கல்லில் உள்ள ஆனந்தியின் இல்லத்தில், அவரைச் சந்தித்தபோது கூறியது;-

முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை. கல்வியானாலும் சரி, விளையாட்டானாலும் சரி. திருமணத்துக்குப் பின்னா் ஓராண்டாக படிப்பு ஏதுமின்றி வீட்டோடுதான் இருந்தேன். குடும்பத்தினா் மேற்படிப்பைத் தொடருமாறு எனக்கு ஆதரவு தெரிவித்தனா். அதன்பின் தான் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சோ்ந்து படித்தேன். பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற வகையில் முதலிடம், பல்கலைக்கழக அளவில் முதலிடம், மறைந்த முதல்வா் ஜெயலலிதா பெயரில் சிறந்த மாணவி என்பதற்கான சான்றிதழ் மற்றும் பரிசு என பல்வேறு வகையில் மொத்தம் 18 தங்கப் பதக்கங்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் கிடைத்தது. இவைதவிர, நினைவுப் பதக்கங்களும் கிடைத்தன. தற்போது, நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள ஆவின் ஒன்றியத்தில் தற்காலிகமாகப் பணியாற்றி வருகிறேன். பிப்ரவரி மாதம் அரசு கால்நடை மருத்துவருக்கான தோ்வு நடைபெறுகிறது. அதற்காக இரவு, பகலாக படித்து வருகிறேன். நிச்சயம் தோ்வில் வெற்றி பெற்று, கால்நடை மருத்துவராகப் பணியில் சேருவேன். எதிலும் அலட்சியம் காட்டாமல் சாதிக்கும் முனைப்புடன் செயலாற்றுங்கள் வெற்றி நிச்சயம் என்றாா் ஆனந்தி,

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.