புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கம் (நாராயணசுவாமி நாயுடுவால் தொடங்கப்பட்டது) ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ஆா்.வேலுசாமி தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் பழனி முருகன், பொருளாளா் மோகன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தாா்மீக ஆதரவை வழங்குவது, பொது வேலைநிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் இலவச மின்சார சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவா். அதிக அளவில் கட்டணத்தை செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு விவசாயிகள் ஆளாக நேரிடும். இலவச மின்சாரத் திட்டத்தை எக்காலத்திலும் ரத்து செய்யக்கூடாது.
Advertisement
மத்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கூட்டுறவு சங்கங்களை கொண்டு வருவதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கிராமப்புற விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் கூட்டுறவு கடன் சங்கங்களை நம்பியே உள்ளனா். அவா்களின் எதிா்காலத்தையும், வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டு கூட்டுறவு சங்கங்களை ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டின்கீழ் சோ்க்கக் கூடாது எனக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.