நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு
நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை வெளுத்து வாங்குகிறது. சேலம், விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகம் உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஒரு வாரமாக அறிவித்து வந்தபோதும் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.
கொல்லிமலையில் மட்டும் அதிகப்படியான மழைப் பொழிவு இருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மேல் வானம் இருண்டு மேகங்கள் திரண்டபடி காட்சியளித்தன. 5 மணிக்கு மேல் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழையால் நாமக்கல்–சேலம் சாலை, பரமத்தி சாலை, மோகனூர் சாலை, திருச்சி சாலை, துறையூர் சாலை உள்ளிட்ட பகுதிகள் ஆறு போல் மாறின. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஆங்காங்கே சாலைப் பணிகள் நடைபெறுவதால் நடந்து சென்றோர் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்த நிலை காணப்பட்டது.
சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர், மழை நீருடன் கலந்து சாலைகளில் தேங்கிய வண்ணம் காட்சியளித்தன. மழையும் பொருட்படுத்தாமல் நகராட்சி ஊழியர்கள் அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக நாமக்கல்–சேலம் சாலையில் ஆறு போல் மழை நீர் ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின.
பிற்பகல் 5 மணி முதல் இரவு 7 மணி வரையில் மழை பெய்ததால் நாமக்கல் நகரப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.வெளிமாவட்டங்களில் இருந்தும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு வந்தோர் மிகவும் சிரமத்திற்கு இடையே தங்களுடைய வீடுகளுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.