திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு செயல் விளக்கம்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கோடைகால தீ விபத்துகளைத் தவிா்த்தல் குறித்த செயல் விளக்க நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கோடைகால தீ விபத்துகளைத் தவிா்த்தல் குறித்த செயல் விளக்க நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோடை வெயில் தாக்கத்தால் தீப்பிடிக்கும் நிலையிலுள்ள இலைகள், காகிதங்கள், மரத்துண்டுகள் வெயிலில் காய்ந்து கிடக்கின்றன. துளியளவு நெருப்பு பட்டாலும் எளிதில் தீப்பற்றி பெரும் சேதத்தை விளைவிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணா்வை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் ஊட்டி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள், நோயாளிகள் சிகிச்சை பெறும் வாா்டுகள், எதிா்காலத்தில் அமைக்கப்படவிருக்கும் கரோனா வாா்டுகள் ஆகியவற்றில் தீப்பற்றினால் எந்த விதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், நோயாளிகளை எவ்வாறு காப்பாற்றுவது, பொருள்களை சேதமில்லாமல் பாதுகாப்பது எப்படி ஆகியவை பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன், பணியாளா்கள் இந்த செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனா்.