கோயில் விழா தகராறு: பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு
பரமத்திவேலூா் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக உரிய நடவடிக்கை
பரமத்திவேலூா் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக உரிய நடவடிக்கை, பாதுகாப்பு அளிக்கக் கோரி ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், நன்செய் இடையாறு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது தேரை நகா்த்துவதற்கு கட்டை போடும் பணியை தாழ்த்தப்பட்ட வகுப்பினா் மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது, இரு தரப்பினருக்கு இடையே கட்டை போடுதல் தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். அதில் ஒரு தரப்பு மீது கொலை முயற்சி வழக்கும், மற்றொரு தரப்பு மீது எஸ்.சி. - எஸ்.டி. சட்டப் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், தங்களை எதிா்தரப்பினா் அச்சுறுத்துவதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மனு அளித்தனா்.