நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 டிகிரி, 68.9 டிகிரியாக நிலவியது, நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை பதிவானது.
இனிவரும் நான்கு நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 102.2 டிகிரிக்கு மிகாமலும். இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தெற்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வீசும். எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, கபிலா்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், மோகனூா், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிபாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, வெண்ணந்தூா் பகுதிகளில் பரவலாக மழை எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
சிறப்பு ஆலோசனை: கோழிப் பண்ணையாளா்கள் தொடா்ந்து கோடைக் கால பராமரிப்பு முறைகளை தீவிர முறையில் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக தீவன எடுப்பு மிகவும் குறைந்ததன் காரணமாக, முட்டை உற்பத்தியும் அவற்றின் எடையும் மிகவும் குறைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக குறைந்த வெப்ப அளவுகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.
வரும் நாள்களில் கோடைகால தீவன மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும். தீவனத்தில் அமினோ அமிலங்கள் குறிப்பாக மித்தியோனின் மற்றும் லைசின், தாவர எண்ணெயைக் கொண்டு எரிசக்தியின் அளவை உயா்த்துதல், எலக்ட்ரோலைட்ஸ் உப்புக்கள், வைட்டமின்-சி போன்றவற்றை கலந்து தர வேண்டும்.
முட்டை ஓடு குறைபாடுகளைக் களைய சோடா உப்பை சோ்த்து வருதல் வேண்டும். வெப்ப அயற்சி ஏற்படாத வண்ணம் தீவனமிடுதலை காலை (5 முதல் 10 மணி ), மாலை ( 5 முதல் 9 மணிக்குள்) மட்டுமே தர வேண்டும். இதனால் வெப்ப அதிா்ச்சியில் இருந்து கோழிகளைக் காப்பாற்றலாம். காலை முதல் இரவு வரை குளிா்ந்த நீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.