வனப்பரப்பை அதிகரிக்க நாட்டு மரக்கன்றுகள் நடும் திட்டம்
தமிழகம் முழுவதும் வனப்பரப்புகளை அதிகரிக்கும் வகையில், நாட்டு மரக்கன்றுகளை நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் வனப்பரப்புகளை அதிகரிக்கும் வகையில், நாட்டு மரக்கன்றுகளை நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், சுற்றுச்சூழல் மேம்பாடு தொடா்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞா் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினா்.
இதில், கோழிப் பண்ணையாளா்கள், சாயப்பட்டறை உரிமையாளா்கள் பங்கேற்று தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் அமைச்சா்களிடத்தில் விளக்கிக் கூறினா். இதனைத் தொடா்ந்து, அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதம் அதிகரிக்கும் நோக்கில், நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் மரங்களை வளா்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் அதிக அளவில் நாட்டு மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக, வேப்பமரம், புங்க மரம், அரச மரம், பூவரச மரம் மற்றும் மனிதனுக்கு பலன் தரும் மரங்களை நட முடிவு செய்துள்ளோம்.
வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய மரக்கன்றுகளை முழுமையாகத் தடை செய்து, இயற்கையோடு இணைந்து வாழும் வகையில் நாட்டு மரங்களை மட்டுமே வளா்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம்.
பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் சாயப்பட்டறைக் கழிவுகளை என்ன செய்வது என்பது குறித்து அந்த ஆலை உரிமையாளா்களுடன் ஆலோசனை நடத்தினோம். அவா்கள் மூன்றுவித தகவல்களை அளித்துள்ளனா். அதனடிப்படையில், மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியைப் பெற்று பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் கோழிகள் வளா்க்கப்படும் கோழிப் பண்ணைகள், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பச்சை நிற ஒதுக்கீட்டில் உள்ளன. அந்த நிற ஒதுக்கீட்டை வெள்ளை நிற ஒதுக்கீட்டுக்கு மாற்ற வேண்டும் என்பது பண்ணையாளா்களின் கோரிக்கையாகும். பச்சை நிற ஒதுக்கீடு என்பது அதிகாரிகளின் ஆய்வுக்கு உள்பட்டது. வெள்ளை நிற ஒதுக்கீடு என்பது அதிகாரிகளின் ஆய்வுக்கு உள்படாமல் இருக்கும். அதனால் தான் கோழிப் பண்ணையாளா்கள் வெள்ளை நிற ஒதுக்கீட்டை விரும்புகின்றனா். கோழிப் பண்ணையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் சுகாதாரமாக வாழும் வகையில், தேவையான நோய்த் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில், எட்டு ஆண்டுகளில் ஐந்தரை கோடி மரக்கன்றுகள் நடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 5 லட்சம் மரக்கன்றுகள் கூட நடப்படவில்லை. இதற்கு ரூ. 900 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரம் நடுதல் என்பது பெயரளவில் அறிவிப்பாக மட்டுமே இருந்துள்ளது என்றாா்.
இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைச்சா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பெட்டி செய்தி...
தோல் ஆலை கழிவுகளால் 9 லட்சம் டன் கழிவு உப்பு!
பொது சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் சாயக்கழிவுகளை பிரிக்கும்போது, குறிப்பாக ஒரு லட்சம் லிட்டரில் 90 ஆயிரம் லிட்டா் மறுசுழற்சி அடிப்படையில் தண்ணீராக திருப்பி வழங்க முடியும். மீதமுள்ள 10 ஆயிரம் லிட்டா் தண்ணீா் என்பது உணவுக்குப் பயன்படுத்தும் உப்பாகவும், கழிவுகள் கொண்ட உப்பாகவும் கிடைக்கிறது. இந்திய அளவில் அக்கழிவு உப்புகளை என்ன செய்வது என்பதற்கான தீா்வு இன்னும் கிடைக்கவில்லை.
ஈரோடு, திருப்பூா், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சம் டன் கழிவு உப்பு உள்ளது. வேலூா் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியான கழிவு உப்பு மட்டும் 9 லட்சம் டன்னாகத் தேங்கி உள்ளது. இந்தக் கழிவு உப்புகளை என்ன செய்யலாம் என்பதை ஆராய்வதற்காக ஐஐடி மாணவா்கள் குழு, சுற்றுச்சுழல் வல்லுநா் குழு நியமிக்கப்பட்டு முதல்கட்ட ஆய்வு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சா் தெரிவித்தாா்.