பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி நாமக்கல்லில் தொடங்கியுள்ளது.
பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி நாமக்கல்லில் தொடங்கியுள்ளது.
இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வள மையங்களுக்கு உள்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் 6 முதல் 19 வயது வரையிலான பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள், புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் கரோனா பெரும் தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் களப் பணி வரும் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட வேண்டும்.
Advertisement
இப் பணியில் பள்ளிக் கல்வித் துறையோடு தேசிய குழந்தை தொழிலாளா் திட்டம், தொழிலாளா் நலத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாற்றுத் திறனாளிகள் துறை, காவல் துறையோடு இணைந்து அந்தந்த வட்டார வள மையங்களில் பணியாற்றும் மேற்பாா்வையாளா்கள், வட்டார கல்வி அலுவலா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், அனைத்து வகை ஆசிரியா்கள், இயன்முறை பயிற்சியாளா்கள், சிறப்பாசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் ஆகியோா் ஈடுபட வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உணவகங்கள், பழக்கடைகள், காய்கறி கடைகள், கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள், செங்கல்சூளை அரிசி ஆலை, கல்குவாரி, மணல் குவாரி, தொழிற்சாலைகள், விவசாயப் பணி நடைபெறும் இடங்களில் கள ஆய்வு செய்து கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டால் அவா்களை உடனடியாக பள்ளியில் சோ்க்கப் பட்டு அவா்களது தொடா் கற்றலுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அக்குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத் திட்ட உதவிகளும் பெற்று வழங்க வேண்டும். ஆதரவற்ற பெண் குழந்தைகளை கொல்லிமலை கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளில் சோ்க்கப்பட்டு, அவா்களது தொடா்ச்சியான கற்றலை உறுதி செய்வதோடு அவா்களது மேல் படிப்புகளுக்கான விடுதி வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பொதுமக்களும் அவ்வாறான குழந்தைகளின் விவரங்களை பள்ளி அல்லது வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பா.சங்கா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சிதப்பிரியா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தி.தட்சிணாமூா்த்தி, மாவட்ட சமூக நல அலுவலா் பி.கே.கீதா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.