நலவாரியத்தில் சோ்க்கை: தூய்மைப் பணியாளா்களுக்கு அழைப்பு
தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. விபத்து இறப்பு, விபத்து ஏற்பட்டிருந்தால் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப உதவி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவி, கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு, திருமண உதவித்தொகை, கண் கண்ணாடி வாங்க உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் அனைத்து இனத்தைச் சாா்ந்த தூய்மைப் பணிபுரிவோா் தொழிலில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 60 வயது வரையிலானவா்களுக்கு வழங்கப்படுகிறது.
Advertisement
தூய்மைப் பணியாளா்கள் மத்திய, மாநில அரசு, அரசு சாா்ந்த நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோா் ஆகியோரை நல வாரியத்தில் உறுப்பினராக சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா் நகராட்சி, பேரூராட்சி, தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம்.
தூய்மைப் பணியாளா்கள் உறுப்பினராக பதிவு பெற தகுதியுடைய நபா்கள் என்பதற்கான சான்றிதழை சுகாதார ஆய்வாளா், உதவி செயற்பொறியாளா், செயல் அலுவலா், நகராட்சி ஆணையா், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று உரிய படிவத்தில் பூா்த்தி செய்து மாவட்ட மேலாளா், தாட்கோ நாமக்கல் அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.