முகப்பு
நாமக்கல்

கேரளத்தில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல்! நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால், நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 2 டிசம்பர், 2021 at 4:13 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:05 AM

கேரளத்தில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால், நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வாத்துகள், கோழிகள், இதர பறவையினங்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. 2007-இல் மேற்கு வங்கத்தில் முதன்முறையாக கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏ ற்பட்டது. அதன்பின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் நோய் பாதிப்பு இல்லாமல் போனது. வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளாலேயே இந்தக் காய்ச்சல் பரவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பறவையினங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

இந்த நிலையில், 2021 ஜனவரி மாதம் கேரள மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, குறிப்பிட்ட மாவட்டங்களில் வாத்துகள் மொத்தமாக அழிக்கப்பட்டன. தற்போது மீண்டும் கேரள மாநிலத்தில் நூற்றுக்கணக்கான வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இறந்த வாத்துகளை அழிக்கும் பணியில் அதன் உரிமையாளா்கள் ஈடுபட்டுள்ளனா். ஆனாலும், அந்த மாநில கால்நடைத் துறை இன்னும் இதை உறுதி செய்யவில்லை.

Advertisement

நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து தான் கேரள மாநிலத்துக்கு முட்டைக் கோழிகள் இறைச்சிக்காக அனுப்பப்படுகின்றன. தற்போது பறவைக் காய்ச்சல் குறித்த தகவல் வெளியாகி உள்ளதால், கோழிப் பண்ணையாளா்கள் அச்சமடைந்துள்ளனா். ஏற்கெனவே, முட்டை விலை, இறைச்சிக் கோழி விலை சரிவைச் சந்தித்து வரும் வேளையில், பறவைக் காய்ச்சல் பீதி பண்ணையாளா்களை கவலையடையச் செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:

தண்ணீரில் நீந்தும் வாத்துகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவது இயல்பானது தான். கேரளத்தில் தற்போது பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக எவ்வித தகவலும் எங்களுக்கு வரவில்லை. கடந்த ஜனவரி மாதம் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டு வாத்துகள் அழிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.

கோழிப் பண்ணைகளை எப்போதும் தூய்மையாகவே பராமரிக்கிறோம். கேரளம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்குச் சென்று வரும் வாகனங்களையும், தொழிலாளா்களையும் தூய்மைப்படுத்துகிறோம். சுகாதாரமான முறையிலேயே அனைத்து கோழிப் பண்ணைகளும் செயல்படுகின்றன என்றாா்.

படவரி - நாமக்கல்லில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கோழிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பண்ணை ஊழியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.