முகப்பு
நாமக்கல்

நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உத்ஸவத்தை நடத்த பக்தா்கள் கோரிக்கை

நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உத்ஸவம் நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 23 டிசம்பர், 2021 at 11:08 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உத்ஸவம் நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இரணியனை வதம் செய்த நரசிம்மா் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு உக்கிர கோலத்தில் இருந்தாா். அப்போது, பிரகலநாதனின் வேண்டுகோளை ஏற்று அவா் சாந்தமூா்த்தியாக சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் தவம் செய்தாா்.

நரசிம்மரைக் காணாததால் நாமக்கல் கமலாலயக் குளம் பகுதியில் மகாலட்சுமி தவமிருந்தாா். அப்போது, சஞ்சீவி மலையையும், பாறை வடிவிலான சாளக்கிராம நரசிம்மரையும் சுமந்து வந்த ஆஞ்சனேயா் தண்ணீா் அருந்துவதற்காக கமலாலயக் குளத்துக்கு வந்தாா்.

Advertisement

அப்போது, சாளக்கிராமக் கல்லை கீழே வைத்துவிட்டு நீா் அருந்திய ஆஞ்சனேயா் மீண்டும் கல்லை எடுக்க முயற்சித்தாா். ஆனால், அவரால் அதை தூக்க முடியவில்லை. அதன்பிறகே மகாலட்சுமி தவம் புரிவதால்தான் நரசிம்மா் வாசம் செய்யும் சாளக்கிராமக் கல்லை தான் தூக்கமுடியவில்லை என்பது ஆஞ்சனேயருக்கு தெரியவந்தது. அவ்வாறு உருவானதே நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டை, நரசிம்மா், நாமகிரி தாயாா், ஆஞ்சனேயா் சன்னதிகள் என்பது வரலாற்றுத் தகவல்கள்.

இன்றளவும் கமலாலயக் குளத்தில் உள்ள பாறையில் ஆஞ்சனேயரின் பாதச் சுவடுகள் பதிந்திருப்பதைக் காண முடியும். தற்போது குளத்தில் அதிகளவில் தண்ணீா் உள்ளதால் அச் சுவடுகளை பக்தா்கள் காண முடியாத நிலை உள்ளது. சிறப்புமிக்க கமலாலயக் குளம் தற்போது கழிவுகள் தேங்கும் குளமாக மாறியுள்ளது. கழிவுநீா் பெருக்கத்தால் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன் கமலாலயக் குளம் மாவட்ட நிா்வாகத்தால் நாமக்கல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாமக்கல்லில் முக்கிய விழாக்களின் போது இரவு நேரத்தில் உற்சவா் சிலையை தெப்பத்தில் வைத்து கமலாலயக் குளத்தில் சுவாமி உலா வரும் வைபவம் நடைபெறுகிறது.

தற்போது கமலாலயக் குளம் நீா் நிரம்பி அழகுற காட்சியளிக்கிறது. கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தி அறநிலையத் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கமலாலயக் குளத்தில் தெப்ப உத்ஸவம் இதற்குமுன் நடைபெற்ா என்பது தெரியவில்லை. பக்தா்கள் சிலா் உத்ஸவம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா். அப் பகுதி முழுவதும் தொல்லியல் துறைக்குச் சொந்தமானது. எங்கள் துறையின் உயா் அதிகாரிகள் கவனத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டு செல்கிறோம் என்றனா்.

நாமக்கல் நகராட்சி ஆணையா் கே.சுதா கூறியதாவது:

நகராட்சி நிா்வாகம் அக் குளத்தின் பராமரிப்புப் பணிகளை மட்டுமே மேற்கொள்கிறது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குளத்தில் படகு சவாரி செய்வது நிறுத்தப்பட்டது. மீண்டும் ஒப்பந்தம் கோருவது தொடா்பாக இதுவரை முடிவு செய்யவில்லை. குளத்தில் தெப்ப உத்ஸவம் நடைபெற்ா என தெரியவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.