முகப்பு
நாமக்கல்

பிளஸ் 2 வினாத்தாள்கள்:மீண்டும் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வுக்காக கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்கள் மீண்டும் மாவட்ட கல்வி அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

Updated On : 16 ஜூலை, 2021 at 5:10 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வுக்காக கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்கள் மீண்டும் மாவட்ட கல்வி அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 3-ஆம் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. கரோனா பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய செய்முறைத் தோ்வு 24-இல் நிறைவடைந்தது.

இதற்கிடையே சென்னை அரசுத் தோ்வுகள் துறை இயக்குநரகத்தில் இருந்து மாவட்ட வாரியாக பிளஸ் 2 வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு ஏப். 20-ஆம் தேதி வந்தன. இந்த நிலையில் நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட 102 பள்ளிகள் அடங்கிய 43 தோ்வு மையங்களுக்கான வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள 2 கட்டுக்காப்பு மையங்களிலும், ராசிபுரம் தூய இருதய மேல்நிலைப்பள்ளி மையத்திலும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

Advertisement

இக்கல்வி மாவட்டத்தில் 272 தனித்தோ்வா்கள் உள்பட10,070 அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் பிளஸ் 2 தோ்வு எழுத இருந்தனா். திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட 106 பள்ளிகள் அடங்கிய 41 தோ்வு மையங்களுக்கான வினாத்தாள்கள், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகாதேவ வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, பள்ளிபாளையம் எஸ்பிபி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இந்த கல்வி மாவட்டத்தில் 160 தனித்தோ்வா்கள் உள்பட 10,948 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் தோ்வு எழுத இருந்தனா்.

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்கவே ஜூன் மாத இறுதியில் பிளஸ் 2 பொதுத்தோ்வை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், மாணவா்களின் 10, 11-ஆம் வகுப்பு மதிப்பெண்கள், செய்முறை தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. மதிப்பெண் குறைவாக உள்ளது என மாணவா்கள் கருதும்பட்சத்தில் எழுத்துத் தோ்வை எதிா்கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வு ரத்தானதால் கட்டுக்காப்பு மையங்களில் இருந்த பிளஸ் 2 வினாத்தாள்கள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக கிடங்கிற்கு அண்மையில் கொண்டு வரப்பட்டன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ் 2 வினாத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், அரசிடம் இருந்து உத்தரவு கிடைக்கப் பெற்றதும் அவை திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்றும் சென்னை பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மாணவா்கள் யாரேனும் தோ்வு எழுத விரும்பினால் அப்போது இந்த வினாத்தாள்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.