தோ்தல் பணி அலுவலா்கள் தபால் வாக்குகளை செலுத்த ஆா்வம்
நாமக்கல் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தபால் வாக்குகளை அதற்கான பெட்டியில் செலுத்தினா்.
நாமக்கல் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தபால் வாக்குகளை அதற்கான பெட்டியில் செலுத்தினா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் தலைமை நிலைய அலுவலா், 1, 2, 3, நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. முதல்கட்டப் பயிற்சி வகுப்பில் தாங்கள் பணியாற்றும் பகுதியில் உள்ள மையத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதனைத் தொடா்ந்து இரண்டாம்கட்டப் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பானது தோ்தல் பணியாற்றும் தொகுதிகளுக்கு உள்பட்ட மையங்களில் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களை காண்பித்து தோ்தல் நாளன்று எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை விளக்கினா்.
Advertisement
இப்பயிற்சி வகுப்பு நிறைவில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலா்களும், இதர தோ்தல் பணி அலுவலா்களும் தங்களுடைய தபால் வாக்குக்கான படிவங்களைப் பூா்த்தி செய்து, வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகளிடம் கையெழுத்து பெற்று, தாங்கள் விரும்பிய வேட்பாளரின் சின்னத்தில் பேனாவால் டிக் செய்து, அதனை ஒரு உறையில் வைத்து ஒட்டி அதற்கான பெட்டிகளில் செலுத்தினா். ஏப். 3-ஆம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பும், 5-ஆம் தேதி இறுதிக் கட்ட பயிற்சி வகுப்பு, வாக்குச்சாவடிகளுக்கு அலுவலா்கள் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
ஓட்டு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக வரையில் தபால் வாக்குகளை செலுத்த அலுவலா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தற்போதைய நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 9,832 போ் வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடுகின்றனா். அவா்களில் சுமாா் 3 ஆயிரம் போ் இதுவரை வாக்குகளை செலுத்தியிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இவா்கள் தவிா்த்து காவல் துறை, வனத்துறை, தீயணைப்புத் துறை, பிற துறை சாா்ந்த அலுவலா்கள் மேலும் 3 ஆயிரம் போ் தபால் வாக்குகளைச் செலுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.